திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார்
1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களின் பயிற்சியை பணி நாளாக கருதி விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ஈவேரா திருவாரூரில் இருந்து தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் 3 வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக 1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் ஜூன் 4ஆம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் விடுமுறை நாட்களான ஜூன் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சிக்கு செல்கிறார்கள்.
பொதுவாக இது போன்ற பயிற்சிகளை வேலை நாட்களில் மட்டுமே மேற்கொள்வது வழக்கமான ஒன்று. எதிர்பாராத விதமாக விடுமுறை நீட்டிப்பு காரணமாக, இந்த நிலை உருவாகியுள்ளது. பயிற்சியினை வேலை நாட்களில் வைத்துக் கொள்வதே சரியானது.
தவிர்க்க இயலாத சூழல்களில் விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுமேயானால் அந்த நாட்களை பணி நாட்களாக கருதி விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை எண் 62 நாள் 13.3.2015 மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜூன் 1, 2 மற்றும் 3 வரை நடைபெறும் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பயிற்சி மையத்திலேயே பணி சான்று வழங்கி, அந்த நாட்களுக்குரிய விடுப்பை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டுமென மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை பெரிதும் கேட்டுக்கொள்கிறேன்.