திருப்பூர் மாவட்டம் குண்டடம் கால்நடை சந்தை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சங்கபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (55) மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் குண்டடம் கால்நடை சந்தைக்கு வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சந்தை அருகே உள்ள தனியார் எண்ணெய் ஆலை எதிரே, சந்தைக்கு செல்லும் கால்நடை வாகனங்கள் சாலையை மறைத்திருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் முன்னே சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம் மோதியது. இதில் விஸ்வநாதன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குண்டடம் போலீசார், விஸ்வநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விபத்தில் சம்பந்தப்பட்ட டாடா ஏஸ் வாகனம் நாகர்கோவில் பகுதியில் காலை உணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் கொண்டு செல்லும் ஒப்பந்ததாரரின் வாகனம் எனவும், அது கோவையில் எப்.சி. (Fitness Certificate) முடித்துவிட்டு நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.