தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் இலுப்பத்தோப்புத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவிலில் அறநிலையத்துறையினர் திடீரென உள்ளே புகுந்து உண்டியல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கபிஸ்தலம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சுமார் 170 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படும் ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவில், கடந்த ஐந்து தலைமுறைகளாக அப்பகுதி கிராம மக்களால் பராமரிக்கப்பட்டு ஆண்டுதோறும் கோவில் திருவிழா சிறப்புடன் செய்து வழிபட்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 4-ஆம் தேதி அறநிலையத்துறையினர் திடீரென கோவிலுக்குள் நுழைந்து உண்டியல் வைத்துவிட்டு சென்றதாக கோவில் நிர்வாகம், மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதனை கண்டித்து ஜூன் 18 ஆம் தேதி வியாழக்கிழமை சிவ சேனா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவசேனா மாவட்டத் தலைவர் பாலூர் ரவி தலைமை தாங்கினார். மாநில செயல் தலைவர் க.சசிகுமார் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார். இதில் சிவசேனா மாவட்டத் தலைவர் கே.சரவணபாரதி, தமிழ்நாடு வ.உ.சி. நலப் பேரவை மாவட்ட பொருளாளர் பி.ஆர். ராதாகிருஷ்ணன் பிள்ளை, கோவில் பூசாரி செந்தில் வேலன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் பி. குருமூர்த்தி, இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அறநிலையத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கோவிலின் பாரம்பரிய உரிமைகள் மற்றும் வழிபாட்டு மரபுகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கோவில் தர்மகர்த்தா இந்துமதி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *