கடலூர் மாவட்டம், புவனகிரி மற்றும் கீரப்பாளையத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்களைப் பற்றி இழிவாக பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினை போலீசார் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம், புவனகிரி மற்றும் கீரப்பாளையத்தில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கீரப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் புவனகிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி. சரவணன், ஒன்றிய செயலாளர் பாலு, திருமூர்த்தி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
அதேபோல், புவனகிரியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், திமுக நகர செயலாளர் ஜெய்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து, அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.