கோவை: கோவை காளப்பட்டியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மோத்தீஷ், தொழில்துறை செயல்பாடுகளை எளிமையாக்கும் புதிய மென்பொருளை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முத்துக்குமார் – முத்துச்செல்வி தம்பதியரின் மகனான மோத்தீஷ், சிறுவயதிலிருந்தே கணினி மற்றும் நிரலாக்கத் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். அந்த ஆர்வத்தின் தொடர்ச்சியாக, “Rule-Based Automatic Form Generator for Industrial Applications” (தொழில்துறை பயன்பாடுகளுக்கான விதிமுறை அடிப்படையிலான தானியங்கி படிவ உருவாக்கி) என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

மேம்பட்ட Python நிரலாக்க மொழியை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள், தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் மற்றும் படிவங்களை தானியக்க முறையில் உருவாக்கி, தரவுகளை துல்லியமாக கையாள உதவுகிறது. இதன் மூலம் மனிதப் பிழைகள் குறைக்கப்பட்டு, பணிகள் விரைவாகவும் திறம்படவும் நிறைவேற்றப்படுகின்றன.

வழக்கமான பள்ளி அறிவியல் திட்டங்களைத் தாண்டி, வணிக ரீதியிலான பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள், தற்போது தமிழகத்தின் முன்னணி அரசுத்துறை நிறுவனம் மற்றும் பல்வேறு முன்னணி பொறியியல், உற்பத்தி நிறுவனங்களில் முக்கிய ஆவணப் பணிகளை எளிதாக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கண்டுபிடிப்பு குறித்து பேசிய மாணவன் மோத்தீஷ், தனது தந்தை இரவு நேரங்களில் அதிக நேரம் செலவிட்டு ஆவணப் பணிகளை மேற்கொள்வதை பார்த்ததே இந்த மென்பொருளை உருவாக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியதாக கூறினார். மேலும், Python தொழில்நுட்பத்துடன் இதை மேம்படுத்தி உருவாக்கியுள்ளதால், அரசு விதிமுறைகளுக்கு இணங்க தொழில்துறைகள் எளிதாக பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகப் பணிகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் தானியங்கி படிவ மென்பொருட்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மைல்கல் சாதனையை பாராட்டி, ஸ்ரீ சைதன்யா பள்ளியின் இயக்குநர்கள் சீமா மற்றும் நாகேந்திரா, செயல்பாட்டுத் துறை தலைவர் ஹரிபாபு ஜம்பானி, ஏ.ஜி.எம். நாகேஸ்வர ராவ், ஆர்.ஐ. பாலகிருஷ்ணா, பள்ளி முதல்வர் கோகிலவாணி உள்ளிட்டோர் மாணவன் மோத்தீஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

வகுப்பறைக் கல்விக்கும் தொழில்துறை தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, நிஜ உலகப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்கியுள்ள மாணவன் மோத்தீஷின் இந்த சாதனை, கல்வித்துறையிலும் தொழில்நுட்ப வட்டாரங்களிலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *