தூத்துக்குடி வடக்கு பகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், தமிழக வெற்றி கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பூபாலராயபுரத்தில் நடைபெற்றது.

இந்த விழாவை வடக்கு பகுதி செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆனந்தகுமார் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் 25 பேருக்கு தையல் இயந்திரங்கள், 800 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பள்ளிப் பைகள், சைக்கிள்கள், அயன் பாக்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் சுமார் 2,000 பேருக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், “மக்களின் ஆதரவால் இந்த அரசு அமைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு எங்களுக்கு ஒரு அல்லது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கூட வரமாட்டார்கள் என்று சிலர் கூறினார்கள். ஆனால், மக்களின் பேராதரவால் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும் தலைவரின் பிறந்தநாளுக்கு தூத்துக்குடி வெற்றிப் பரிசாக அமைய வேண்டும் என்று கூறியிருந்தேன். அது இன்று நிறைவேறியுள்ளது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியை கலைக்கலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. மக்களின் ஆதரவு இருக்கும் வரை ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக தொடர்வார்” என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வடக்கு பகுதி செயலாளருமான ஆனந்தகுமார், முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியிருப்பதை அமைச்சர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், சின்னத்திரை நடிகையும் சமூக ஆர்வலருமான நிலானி சதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *