தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் மாட்டுச் சந்தையில் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து காவலர்கள் நியமிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் – பல்லடம் சாலையில் அமைந்துள்ள குண்டடம் மாட்டுச் சந்தையில் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்க, சந்தை நாளில் போக்குவரத்து காவலர்களை நியமிக்கவும், சாலையில் எச்சரிக்கை தடுப்புப் பேனர்கள் அமைக்கவும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் சமூகப்பணியில் ஈடுபட்டு வரும் ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தாராபுரம் – பல்லடம் நெடுஞ்சாலையோரத்தில் குண்டடம் மாட்டுச் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தைக்கு தாராபுரம், குண்டடம், மூலனூர், காங்கயம், பொங்கலூர், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களில் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதால், நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சாலையைக் கடக்கும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சூழலும் உருவாகியுள்ளது.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சந்தை நாளில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகத்தைக் குறைத்து செல்லும் வகையில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புப் பேனர்கள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *