தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டையில் அமைந்துள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் புத்தாக்கப் பயிற்சி (Induction Programme) தொடக்க விழா நான்காம் நாளாக நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அ. முருகன் தலைமை வகித்து பேசுகையில், “கல்லூரி வாழ்க்கை என்பது கல்வியை மட்டும் கற்பதற்கான இடமல்ல. ஒழுக்கம், பொறுப்பு, நட்பு, தலைமைத்துவம், தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பாகும். கல்லூரியின் விதிமுறைகள், கல்வி வாய்ப்புகள், மாணவர் நலத் திட்டங்கள் மற்றும் வளாக வாழ்க்கையை அறிந்து கொள்ள இந்தப் புத்தாக்கப் பயிற்சி சிறந்த தொடக்கமாக அமையும். புதிய பயணத்தை ஆர்வத்துடனும் நேர்மறை எண்ணத்துடனும் தொடங்கி, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கல்லூரியின் பெருமையை உயர்த்தும் மாணவர்களாக வளர வேண்டும்” என்றார்.

நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சுந்தர் பேசுகையில், மாணவர்கள் கல்வியுடன் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக் கொண்டு, சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாணவர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்பு (Student Safety and Social Responsibility) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ராகிங் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்புகள், உள்புகார் குழு (ICC) மற்றும் பாலியல் தொல்லை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு, அரசின் கல்வி மற்றும் மாணவர் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள் முனைவர் உமையா பார்வதி, வசந்தா, முனைவர் சுரேஷ், ஜெயக்குமார் மற்றும் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *