தேனி, ஜூலை 6: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் நடைபெறவுள்ள ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் திருவிழா காலத்தில் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சீரான மற்றும் பாதுகாப்பான தரிசன வசதிகளை ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பக்தர்கள் எளிதில் தரிசனத்திற்கு செல்லும் வகையில் வழிகாட்டிப் பலகைகள் அமைத்தல், கோவில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை பலப்படுத்துதல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய தேவையான சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேலும், குச்சனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து போதிய குடிநீர் வசதி ஏற்படுத்துதல், சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திருவிழாவின்போது போக்குவரத்து ஒழுங்குமுறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காவல் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராமகிருஷ்ணன், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் சையது முகைதீன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, கோவில் செயல் அலுவலர் நதியா, பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.