திருவொற்றியூர், ஜூலை 7: சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் பலத்த காற்றின் காரணமாக சுமார் 15 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் கன்னியப்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக கன்னியப்பனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்துக் காவல்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதுகுறித்து மண்டலக் குழுத் தலைவர் தி.மு. தனியரசு, பலத்த காற்று மற்றும் மழைக்காலங்களில் பழமையான மரங்களை முன்கூட்டியே ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.