ராணிப்பேட்டை, ஜூலை 6:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாரத்தில் சொர்ணவாரி பருவத்தில் போதிய பருவமழை பெய்யாததால் பல இடங்களில் நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நெமிலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அருணாகுமாரி, பெரப்பேரி, மகேந்திரவாடி, புன்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்தார்.

நெமிலி வட்டாரத்தில் இந்தாண்டு சொர்ணவாரி பருவத்தில் சுமார் 5,125 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவமழை குறைவால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதன் காரணமாக கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் போதிய தண்ணீர் கிடைக்காமல், பல பகுதிகளில் நெற்பயிர்கள் காய்ந்து சேதமடைந்துள்ளன.

ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை உதவி இயக்குநர் அருணாகுமாரி, “2026–27 ஆம் ஆண்டில் கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், நெற்பயிர்களுக்கு தேவையான நீர் கிடைக்கவில்லை. இதனால் கிளைக்கும் பருவம், தொண்டை உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் முக்கிய வளர்ச்சி நிலைகளில் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, முற்றிலும் காய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன,” என்றார்.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதிக்குரிய வேளாண்மைத் துறை விரிவாக்க அலுவலர்களை உடனடியாக தொடர்புகொண்டு, கிராம நிர்வாக அலுவலர் தலைமையிலான குழுவின் மூலம் சேதமடைந்த சாகுபடி பரப்பை ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அதேபோல், தற்போதைய சொர்ணவாரி பருவத்திற்கான பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் முன்மொழிவு விண்ணப்பம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.703 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்யலாம் என்றும், வறட்சி, மழைவெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பு பெற அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டில் இணைவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *