துறையூர் ஜீலை -09
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா அலுவலகம் முன்பு
09/07/2026 ஆம் தேதி காலை 10 மணி அளவில் 100சதவீதம் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் காதில் பஞ்சு வைத்து கொண்டு மம்மூட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வட்டாட்சியர் சிவக்குமாரிடம் மனு அளித்தனர்.இதில் மாநில தலைவர் புரவலர் பூ. விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது,
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே, தாங்கள் தங்களது தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும், விவசாயிகள் இந்திய நாட்டின் முதுகெலும்பு என கூறினீர்கள்.அடுத்த ஜென்மத்தில் நான் விவசாயியாக
பிறக்க விரும்புகிறேன் என்று கூறினீர்கள்.5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் பயிர்கடனும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் பயிர்கடனும், தள்ளுபடி செய்வேன் என விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள்.ஆட்சியை பிடித்து முதலமைச்சராக அமர்ந்த உடன் தேர்தல் அறிக்கை மறந்தும் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்தும் சிறு குறு விவசாயிகளுக்கு ரூ. 75,000/- பயிர் கடன் தள்ளுபடி என்றும் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 35,000/- பயிர் கடன் தள்ளுபடி என்றும் 17 நிபந்தனைகளை வகுத்து, பயிர்கடன் தள்ளுபடி அறிவித்திருப்பது “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல்” உள்ளது.
எனவே விவசாயிகளை சின்ன விவசாயி, பெரிய விவசாயி என தரம் பிரிக்காமல் விவசாயிகள் வாங்கிய முழு பயிர்கடனையும், விவசாயிகள் வாங்கிய நகைக் கடனையும், விவசாயிகள் வாங்கிய கறவை மாட்டுக் கடனையும், நிபந்தனைகளை கைவிட்டு, விவசாயிகளுக்கு கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய முழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என்று பேசினார்.இதில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காதில் பஞ்சு வைத்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தின் செல்லிப்பாளையம் தம்பு செல்வராஜ் நன்றியுரையாற்றினார். துறையூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் அறிவுத்தலின் படி காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் ராஜதுரை உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்