தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மண்டலம்–4, வார்டு எண் 55-க்கு உட்பட்ட காமராஜர் சாலை, மூவேந்தர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த திடீர் கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வார்டு மாமன்ற உறுப்பினர் புகழேந்திக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் போக்குவரத்துக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஏற்பட்டிருந்த இடையூறு விரைவாக சரிசெய்யப்பட்டது. துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட மாமன்ற உறுப்பினர் புகழேந்திக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவித்தனர்.