தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
வேங்கிப்பாளையம் கோகுல் காட்டன் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட பஞ்சு எரிந்து சேதம்.!
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கிப்பாளையம் செங்காட்டுத் தோட்டம், ராமநாதபுரம் அருகே நந்தகோபால் (47) என்பவருக்குச் சொந்தமான கோகுல் காட்டன் பஞ்சு குடோன் இயங்கி வருகிறது.
இன்று மதியம் சுமார் 1.30 மணி அளவில், குடோனில் திடீரென கரும்புகை எழுந்ததை அங்கு பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிவா (29), அரவிந்த் (28) ஆகியோர் கவனித்தனர். உடனடியாக அவர்கள் வெளியேறிய நிலையில், மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தாராபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆ. ரவிச்சந்திரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ வேகமாக பரவியதால், காங்கேயம் தீயணைப்புத் துறையினரின் உதவியும் கோரப்பட்டது. அதன்பேரில் காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மு. கார்த்திகேஷன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவும் சம்பவ இடத்துக்கு வந்து, தாராபுரம் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும், உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை.
தொழில் நிறுவன உரிமையாளர் நந்தகோபால், இந்த தீ விபத்தில் ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானதாக தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.