சென்னை: பெரிய காசி கோயில் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவர் கௌதம் (15) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஜோதிஸ் (15) ஆகியோர் விடுமுறை நாளையொட்டி பெரியகுப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட பலத்த அலைகளில் இருவரும் சிக்கி கடலில் மூழ்கி தத்தளித்தனர். இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக கடலில் இறங்கி இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, கௌதம் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மற்றொரு மாணவரான ஜோதிஸ் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
விடுமுறை நாட்களில் கடலில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.