கரூர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன் பேசியதாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்தும், பெண்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டும் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் ஒருமுறை அளிக்கும் மனுக்கள் மீண்டும் வராத வகையில், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன், பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 780 மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி மனுக்களை அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 74 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30,232 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன் வழங்கினார். இதில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750 மதிப்பிலான சக்கர நாற்காலியும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,140 மதிப்பிலான காதொலி கருவிகளும், ஒருவருக்கு ரூ.898 மதிப்பிலான ஊன்றுகோலும், ஒருவருக்கு ரூ.444 மதிப்பிலான பார்வையற்றோருக்கான மடக்குக் குச்சி மற்றும் கருப்பு கண்ணாடியும் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சு.சக்தியபாலகங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அக்பர் அலி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *