கோவை, ஜூலை 13:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பேருந்து வசதி, சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 1,800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால், வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் தினமும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த மனுவை கோவை வடக்கு மாவட்டத் தலைவர் கோவை எஸ். மஹேந்திரன் தலைமையில், மாநில துணைத் தலைவர் பிரின்ஸ் சுந்தர் அண்ணாச்சி, மாவட்டச் செயலாளர் கொங்கு பழனிசாமி, மாவட்டப் பொருளாளர் ஐ.டி. சரவணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஜி. மணிகண்டன் ஆகியோர் அதிகாரிகளிடம் வழங்கினர்.
அத்துடன், குப்புச்சிபாளையம் பகுதியில் சாலையோர சிறு வணிகர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், சமுதாயக் கூடம், சிறுவர் பூங்கா, ரேஷன் கடை உள்ளிட்ட பொதுமக்கள் நலத் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கொங்கு தமிழச்சி பேரவை மாவட்ட அமைப்பாளர் தெய்வநாயகி, குப்புச்சிபாளையம் கிளைச் சங்கத் தலைவர் தீபா, கிளைச் செயலாளர், பொருளாளர், சங்க உறுப்பினர்கள் மற்றும் ஹவுசிங் யூனிட் பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.