கோவையில் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி அவினாசி சாலை சுகுணா மண்டப அரங்கில் தொடங்கியுள்ளது.
ஜூலை 16 ந்தேதி துவங்கி ஆறு நாட்கள் நடைபெற உள்ள,இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் பாரம்பரிய கலைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
கண்காட்சியில் சந்தேரி, ஜாம்தானி, பட்டன் படோலா, மதுரை சுங்குடி, காடி, கலம்காரி உள்ளிட்ட பாரம்பரிய நெசவுப் பொருட்கள், மூங்கில் மற்றும் பிரம்புக் கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள், பித்தளைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், தோல் பொருட்கள், ராஜஸ்தானி மரச்சாமான்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், “நம்பிக்கை” திட்டத்தின் மூலம் பொருளாதார மற்றும் வாழ்வியல் சூழலால் பாதிக்கப்பட்ட கைவினைக் கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், டெல்லி தஸ்த்கர் வளாக தீ விபத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கைவினைக் கலைஞர்களுக்கும் சிறப்பு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கைவினைப் பொருட்களை வாங்கி பாரம்பரிய கலைகளையும், கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்று கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.