தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் “தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பயிற்சி மற்றும் கல்வெட்டியல் அறிமுகம்” என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி. பரஞ்சோதி அவர்கள் தலைமை தாங்கி பயிற்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவத்தின் நிறுவனர் இர. தினகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழர் வரலாறு, கல்வெட்டுகள் மற்றும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்தின் தொன்மை, அதன் வரலாற்றுப் பெருமை மற்றும் பாதுகாப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தமிழ் துறைத் தலைவர் சதீஷ், வரலாற்றுத் துறைத் தலைவர் திருவாசகம், வேதியியல் துறைத் தலைவர் மற்றும் அலுவலக நிர்வாகி பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினரை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர்.
இப்பயிற்சியின் முக்கிய நோக்கம், உலகின் தொன்மையான எழுத்து மரபுகளில் ஒன்றாக விளங்கும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்தின் சிறப்பை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், பண்டைய தமிழரசர்கள் வழங்கிய கொடைகள், கல்வெட்டுகள் மற்றும் அவற்றின் வரலாற்றுச் செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்வதுமாகும். மேலும், கல்வெட்டுகளை வாசிக்கும் முறைகள், தமிழி எழுத்துக்களை எழுதும் பயிற்சி மற்றும் தமிழின் தொன்மை குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத் துறை மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கல்வெட்டுகளை வாசிக்கும் முறையையும் தமிழி எழுத்துக்களை எழுதும் முறையையும் பயின்றனர். இதன் தொடர்ச்சியாக, தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவத்தின் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் முதல்முறையாக “தமிழி (தமிழ் பிராமி) எழுத்தில் கையொப்பமிடும்” விழிப்புணர்வு முயற்சி தொடங்கப்பட்டது . இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை கல்லூரி முதல்வர் முனைவர் சி. பரஞ்சோதி அவர்கள் தமிழி எழுத்தில் முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் தமிழி எழுத்தில் கையொப்பமிட்டு இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே தமிழின் தொன்மை, கல்வெட்டு மரபு மற்றும் பண்பாட்டு பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தமிழ்மொழியின் பெருமையையும் அதன் எழுத்து மரபையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பான முயற்சியாக அமைந்தது.