பேராவூரணி, ஜூலை 17:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சோழபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற மறைந்த தங்கராசன், ரூ.3 லட்சத்தை நிரந்தர வைப்புத் தொகையாக பள்ளிக்கு வழங்கியிருந்தார். அதன் வட்டித் தொகையின் மூலம் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மறைந்த தங்கராசனின் நினைவாக, அவரது மகள் மலர்விழி ரமேஷ் மற்றும் பேரன் மருத்துவர் கிரண்ராஜ் ஆகியோர், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கீதன், முகமது உசேன், மனோஜ்குமார் மற்றும் 10ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மோகித் சரண், சபரிவாசன், அஸ்மத் கான் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். மேலும், மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்ந்து சிறப்பாக முன்னேறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி வரும் முன்னாள் மாணவர்களான சிவகுமார், திருவேங்கடம், கேட்டரிங் சரவணன், சாதிக் அலி, ஜக்கரியா மற்றும் ஆசிரியர் இளந்திரையன் ஆகியோரை பள்ளி நிர்வாகம் பொன்னாடை போர்த்தி கவுரவித்தது.

மேலும், கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் உதவித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *