அரியலூர், ஜூலை 17:
அரியலூரில் வரும் ஜூலை 19-ம் தேதி இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட், அரியலூர் சிமெண்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் கங்காமிர்தம் கதிர்வேல் மனிதவள அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாம், ஜூலை 19-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அரியலூர் வ.உ.சி. தெருவில் உள்ள ஏ.கே.எம். ஐ.ஏ.எஸ். அகாடமி வளாகத்தில் நடைபெறுகிறது.
முகாமில் 50-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் பங்கேற்று நுரையீரல் நோய்கள், மூட்டு வலி, நெஞ்சு வலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், மாதவிடாய் பிரச்சினைகள், குழந்தையின்மை, சிறுநீரக கல், மூளை நரம்பு பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்க உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முகாமில் கலந்து கொண்டு இலவச மருத்துவ சேவையைப் பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தத் தகவலை அமைப்பின் தலைவர் கதிர் கணேசன், செயலாளர் ஏ.கே. சுப்பிரமணியன், பொருளாளர் ஜெகதீசன், ஈ.கே. ராமசாமி, யோகா கலியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் ராஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.