சென்னை, ஜூலை 17:
சென்னை பெருநகர மாநகராட்சியின் 2-வது மண்டலமான மணலி மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலக் குழுக் கூட்டத்தில், புகைப்படம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து திமுக மண்டலக் குழுத் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவி ஆணையர் பத்மநாபன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ். ரவியும் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, முன்னாள் முதல்வரின் புகைப்படம் வைப்பது தொடர்பாக மண்டலக் குழுத் தலைவர் ஏ.வி. ஆறுமுகத்துக்கும், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மக்கள் நலப் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய கூட்டத்தில் தேவையற்ற சர்ச்சைகள் எழுப்பப்படுவதாகக் கூறிய ஏ.வி. ஆறுமுகம், கூட்டத்தை வேறு தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.
அவரைத் தொடர்ந்து திமுக மாமன்ற உறுப்பினர்களும் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால், மணலி மண்டலக் குழுக் கூட்டம் வாக்குவாதம் மற்றும் பரபரப்புக்கு மத்தியில் நிறைவடைந்தது.