நாகப்பட்டினம்,ஜூலை.17-
திறப்பு விழா காண காத்துக் கிடக்கும் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருக்கண்ணபுரம், பில்லாளி, கோட்டூர், திருப்புகலூர், கீழப்பூதனூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாடம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கட்டிடம் சேதமடைந்து இடிக்கப்பட்டு அதே இடத்தில் 15-வது நிதிக்குழு மான்யம் 2023-24 (சுகாதார நிதி) கீழ் ரூ.1 கோடியே 26 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு கட்டுமான பணிகள் முழுவதும் முடிவடைந்து ஆறு மாதங்களை கடந்தும் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. தற்போது செயல்பட்டு வரும் தற்காலிக கட்டிடத்தில் போதிய கழிவறை வசதி, காத்திருப்போர் கூடம் இல்லாததால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு திறப்பு விழா காண காத்துக் கிடக்கும் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.