திருப்பத்தூர் SC/ST சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி புறக்கணிப்பு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம். சுந்தரமூர்த்தி திறந்த கடிதம்
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம். சுந்தரமூர்த்தி, M.A., M.L., தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் SC/ST (வன்கொடுமைத் தடுப்பு) வழக்குகளுக்கான சிறப்பு அரசு பொது வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களை நிலைநாட்டுவோம் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் SC/ST சிறப்பு அரசு பொது வழக்கறிஞர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தகுதியான நபருக்கு வாய்ப்பு வழங்காமல், வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது சமூக நீதி கொள்கைக்கு எதிரானதாகும் என்றும், இது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வலியுறுத்திய அரசியலமைப்புச் சிந்தனைகளுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு வழக்கறிஞர் நியமனங்கள் போன்ற முக்கிய நிர்வாக முடிவுகளில் போதிய கவனம் செலுத்தப்படாதது அரசின் நிர்வாகத் திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நியமனத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, சமூக நீதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
– பி.எம். சுந்தரமூர்த்தி, M.A., M.L.
மாநிலத் துணைத் தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி – வழக்கறிஞர் பிரிவு.