நாகப்பட்டினம்,ஜூலை.20-
இந்த ஆண்டு கோடை வெயில் பல மாவட்டங்களில் சதத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
பசுமையான நீர் நிலைகள், நடவு செய்யப்பட்ட வயல்வெளிகள் வெடித்து பாலைவனமாக காட்சியளிக்கின்றன.
சில தினங்களாக சில மாவட்டங்களில் லேசாக மழை பெய்தது. இந்நிலையில் கடுமையான வெயிலால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படுவதில்லை. பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் புகார் சொல்கின்றனர். குறிப்பாக திருமருகல், ஆலத்தூர், கொத்தமங்கலம், அம்பல், திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:- திருமருகல் வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றை நம்பியே விவசாயிகள் இவற்றை பயிரிட்டனர். இந்நிலையில் அரசு அறிவித்த மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருவதால் பயிருக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
இதனால் பால் பிடிக்கும் பருவத்தில் இருக்கக்கூடிய பயிர்களின் வேர் பகுதிகள் அனைத்தும் காயத்தொடங்கியுள்ளன. மேலும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்கள் வறட்சியில் வெடிப்பு ஏற்பட்டு பாலைவனமாக காணப்படுகின்றன. மும்முனை மின்சாரம் முழுவதுமாக கிடைக்காமல் நடவு செய்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. பயிர்களை காக்க வேண்டும் என்றால் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றனர்.