கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவையை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்க்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் 50க்கும் மேற்பட்ட சால்வைகள் அணிவித்தும் நன்றி தெரிவித்தனர். சால்வைகள் இனி அணிவிக்க வேண்டாம் அதற்கு பதில் அந்த பணத்தில் உங்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சுமார் 1800 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கே சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து பெரியநாயக்கன்பாளையம் செல்ல சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் ஆகிறது. பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியோர், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
ஒரு சில வசதியுடையோர் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு இடங்களில் மனு அளித்தும் இதுவரை பேருந்து வசதிகள் செய்துதரப்படாத நிலையில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷிடம் பேருந்து வசதி கோரி கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதைதொடர்ந்து இந்த பிரச்சினையை நேரில் ஆய்வு செய்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது ஏற்பாட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து காந்திபுரம் வரை செல்லும் வகையில் இன்று புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேர இடைவெளியில் இயங்கும் வகையில் 104 என்ற எண் கொண்ட பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு பூஜைகள் செய்து பேருந்து சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்து அதே பேருந்தில் ஏரி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுடன் சிறிது தூரம் பயணித்தார்.
முன்னதாக அங்கு வந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்க்கு மக்களின் வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அன்றாடப் பயணத்தை எளிதாக்கும் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுத்ததிற்கு நன்றி தெரிவித்து ஆரத்தி எடுத்து 50 க்கும் மேற்பட்ட சால்வைகள் அணிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி சந்தோஷ் இனிமேல் யாரும் எனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம். அதற்கு பதில் அந்த தொகையுடன் தனது பங்களிப்பையும் சேர்த்து உங்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் முதல்வர் விஜயிடம் தொகுதியில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அறிக்கை அளித்திருப்பதாகவும், அதைப் பார்த்து 5 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டியதை ஒரே ஆண்டில் செய்யும் அளவிற்கு இருப்பதாக முதல்வர் தெரிவித்ததாக கூறினார். “தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது மட்டும் அரசியல் அல்ல; மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே உண்மையான மக்கள் அரசியல். கவுண்டம்பாளையம் தொகுதியில் மக்கள் கேட்ட ஒவ்வொரு நியாயமான கோரிக்கையும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்களின் நம்பிக்கையை செயல்பாட்டின் மூலம் தொடர்ந்து காப்போம்,” என சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிப்பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து எம் எல் ஏவிடம் மனு அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அங்குள்ள அங்கன்வாடி மையம், ரேசன் கடைகளை பார்வையிட்டு அங்கு நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார், பொருளாளர் ராஜ்குமார், துணைச் செயலாளர் கருப்பசாமி, பேரூர் கழக இணைச் செயலாளர் அருண்குமார், நிர்வாகி ஹரிஹரன் உள்பட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டன்ர்.