திரையுலகின் முடிசூடா மன்னன், ‘நடிகர்திலகம்’ சிவாஜிகணேசன் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மினியேச்சர் ஓவியக் கலைஞர் யு.எம்.டி.ராஜா ஒரு நெகிழ்ச்சியான மற்றும் பிரமிக்கத்தக்க அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
அவர் தூய்மையின் அடையாளமான ஒரு வெண் நிற வெள்ளை ரோஜா இதழில், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் தத்ரூபமான திருவுருவப் படத்தை வரைந்து தனது அஞ்சலியைப் பதிவு செய்துள்ளார். மிக நுண்ணிய கலைநயத்துடன், அசல் முகம் மாறாமல் ரோஜா இதழில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் பார்ப்போரைக் வியப்பில் ஆழ்த்துவதோடு, சமூக வலைத்தளங்களிலும் பெரும் வைரலாகி வருகிறது.
”வெள்ளை ரோஜாவுக்கு அஞ்சலி” என்ற உணர்வுப்பூர்வமான வாசகத்தோடு, சிவாஜிகணேசனின் நினைவைப் போற்றும் வகையில் கலைஞர் ராஜா உருவாக்கியுள்ள இந்த அரிய படைப்பு, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் காண்போரின் நெஞ்சங்களை நெகிழச் செய்யும் ஒரு உன்னத கலை அஞ்சலியாகத் திகழ்கிறது.