மதுராந்தகம், ஜூலை 21:
உத்திரமேரூர் அருகே மாம்பாக்கத்தில் அமைந்துள்ள அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில், பள்ளித் தாளாளர் அருட்பணி ஜி. பிரபுதாஸ் தலைமையில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், பள்ளிக் கட்டிட கொடையாளர் ஆல்ஃப்ரெட் கூமோ நினைவு நாள், அனைத்து மன்றங்களின் தொடக்க விழா மற்றும் மாணவர் தலைவர்கள் பொறுப்பேற்பு விழா ஆகியவை ஒருங்கிணைந்து நடைபெற்றன.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பள்ளிக் கட்டிட கொடையாளர் ஆல்ஃப்ரெட் கூமோவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளியின் அனைத்து மன்றங்களின் பெயர்ப் பலகைகள் திறந்து வைக்கப்பட்டு, புதிய கல்வியாண்டிற்கான மன்றங்களின் செயல்பாடுகள் தொடங்கி வைக்கப்பட்டன.
மேலும், மாணவர் தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கு பதவியளிப்பு நடைபெற்றது. அவர்களுக்கு பொறுப்புக்கான அடையாளமாக பேஜ் அணிவிக்கப்பட்டு, பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக க்யூமோ பவுண்டேஷன் திட்ட மேலாளர் சார்லஸ் குழந்தை மற்றும் திருக்கழுக்குன்றம் சரக தீயணைப்புத் துறை அதிகாரி வி.எஸ். ரமேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பேஜ் அணிவித்து பதவிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.