எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காவல்துறையினர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் கைது செய்தனர். இதன் எதிரொலியாக சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் திமுக ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
.போராட்டத்தின் போது திமுகவினர் மீது பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்தும், உதயநிதி ஸ்டாலினை கைது செய்த காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், சப்இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை போல் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து திமுக மாவட்ட பொருளாளர் மகா அலெக்சாண்டர் தலைமையில் பேரூர் கழகச் செயலாளர் அன்புச் செழியன் உள்ளிட்ட 30 பேரை வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து சாதிக்கப்பட்டது.