பேராவூரணி, ஆகஸ்ட் 4:
திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அண்ணா சிலை அருகில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், கழகத்தின் ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
தடையை மீறி சாலை மறியல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்த காவல்துறை நடவடிக்கையைக் கண்டித்து திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.
காவல்துறையினர் குவிப்பு மற்றும் கைது நடவடிக்கை சம்பவ இடத்தின் பரபரப்பான சூழலைக் கருத்தில் கொண்டு, பேராவூரணி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பேராவூரணியில் நடைபெற்ற இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன் .