போதைக்கு எதிராக பெடல் சுழற்றும் இளைஞர்: கும்பகோணத்தில் லயன்ஸ் சங்கங்கள் வரவேற்பு
கும்பகோணம் :போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனித் என்ற இளைஞர் ஒற்றைச் சக்கர சைக்கிளில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு வந்துள்ளார்.
சிவில் பொறியல் பட்டதாரியான இவர், கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ‘Say No To Drugs’ என்ற முழக்கத்துடன் கண்ணூரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். இமயமலை வரை செல்வதே இவரது இலக்கு.
இவர் ஏற்கெனவே 2023-24-ம் ஆண்டில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இதேபோன்ற விழிப்புணர்வுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். கோவை, பழனி, ராமேசுவரம், தனுஷ்கோடி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக வந்த இவர் வெள்ளிக்கிழமை கும்பகோணம் வந்தடைந்தார்.
லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 3242 எப் சார்பில், கும்பகோணம் வளையப்பேட்டை பைபாஸ் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தில் இன்று காலை 7.30 மணிக்கு இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்சியில் MISSION 1.5 மாவட்டத் தலைவர் லயன் ராமதுரை தலைமையில், இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் ரொசாரியோ முன்னிலையில் வரவேற்பு நடைபெற்றது.
இதில் கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் சங்கம், குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம், குடந்தை காவேரி லயன்ஸ் சங்கம், கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள அனைத்து சேவைச் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் லயன் ராமதாஸ் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் “போதைப்பொருட்களுக்கு வேண்டாம்” என உறுதிமொழி ஏற்று, அனுப்பி வைத்தனர்.