தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர், பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட 21 காலிப் பணியிடங்கள்: நகராட்சி நிர்வாகம் முடங்கும் அபாயம்.

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நிரந்தர ஆணையர், நிரந்தர பொறியாளர், நிரந்தர மேலாளர் உள்ளிட்ட 21 காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படாததால், நகராட்சி நிர்வாகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி 110 ஆண்டுகள் பழமையான நகராட்சி ஆகும். இங்கு மொத்தம் உள்ள 30 வார்டுகளில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நகராட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளான நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர், அலுவலக மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும், இந்த அலுவலத்துக்கு நகராட்சி உதவிப் பொறியாளர், கணக்கர், நகரமைப்பு அலுவலர், நகரமைப்பு ஆய்வர், பணி மேற்பார்வையாளர், வருவாய் ஆய்வர் உள்ளிட்ட மொத்தம் 21 பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமிக்காததால், அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. தூய்மைப் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதற்கு கூட திணறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தாராபுரம் நகர்மன்றத் தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறியதாவது: கடந்த மே மாதம் முதல் தற்போது வரை தாராபுரம் நகராட்சி ஆணையர் பணியிடம் 100 நாள்களாக காலியாக உள்ளது. இன்று வரை ஆணையர் நியமிக்கப்படவில்லை. நகராட்சிப் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது உடுமலை நகராட்சி ஆணையர் கூடுதல் பொறுப்பாக தாராபுரம் நாகராட்சியைக் கவனித்து வருகிறார். வாரம் ஒரு நாள் அதுவும் 2 மணி நேரம் மட்டுமே வருகிறார். இந்த 2 மணி நேரத்தில் அவர் எத்தனை கோப்புகளை முழுதாகப் படித்துப் பார்த்து கையெழுத்திட முடியும்?

தாராபுரத்துக்கு புதிய நகராட்சி ஆணையரை நியமிக்க வலியுறுத்தி கடந்த 3 மாதமாக முதலமைச்சர், நகராட்சி நிர்வாக இயக்குநர், மண்டல இயக்குநர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். மேலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோரிடம் நேரிலும் மனு கொடுத்துள்ளேன். ஆனால், இன்று வரை புதிய ஆணையரோ, ஏனைய ஊழியர்களோ நியமிக்கப்படவில்லை.

இதனால், வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு, கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்தல், வீட்டு கட்டுவதற்கு அப்ரூவல் வழங்குவது உள்ளிட்ட நகரப் பொதுமக்களின் அத்தியாவசியப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் தாராபுரம் பேருந்து நிலையத்தில், புதிய கட்டடப் பணி முடிந்த 4 மாதங்களுக்கும் மேலாகி விட்டது. மீதம் 5 % சதவீத வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளது. அந்த ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கலாம் இழுத்தடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. மீதி உள்ள 5 சதவீதப் பணிகளை முடித்து, பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் பணி தாமதமாகிக் கொண்டே வருகிறது.

இதனால், இந்தப் பேருந்து நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் நிற்பதற்கு கூட இடமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, தாராபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு நகராட்சி ஆணையர், பொறியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, தாராபுரம் பேருந்து நிலையக் கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவதற்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *