தேனி: வீரபாண்டி பேரூராட்சி 7-வது வார்டு பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சி 7-வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி கோரி, தேனி நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிரந்தர மக்கள் நீதிமன்றம் சார்பில் வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சா. இளங்கோவன் நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டார். இருதரப்பினரிடமும் கலந்தாலோசனை நடத்தப்பட்டு, நீதிபதி ரஜினியின் ஆலோசனையின் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து தேனி மாவட்ட மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சா. இளங்கோவன் மற்றும் பேரூராட்சி பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் அடிப்படையில் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் சாலை வசதி மற்றும் மழைநீர்/கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுதொடர்பான பணிகள் நிறைவு பெற்றதற்கான புகைப்படங்கள் மற்றும் ஆவண ஆதாரங்களுடன் வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சா. இளங்கோவன், இளநிலை உதவியாளர் வாசிமலை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை மற்றும் வடிகால் வசதிகளை ஏற்படுத்திய பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *