தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
.
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). விவசாயியான இவரது மனைவி கோகிலா (33). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், கோகிலா வீட்டில் தனியாக இருந்தபோது, சூரியநல்லூரைச் சேர்ந்தவர்களும், தாராபுரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவருமான சம்பத்குமார் (38), பாலசுப்பிரமணியன் (35), விஸ்வநாதன் (34), ஜெகதீஷ் (36), சோமசுந்தரம் (36) ஆகிய 5 பேரும் மது போதையில் இருசக்கர வாகனங்களில் அவரது வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இருசக்கர வாகனங்களின் ஆக்சிலரேட்டரை வேகமாக முறுக்கியும், தொடர்ந்து ஹாரன் அடித்தும் ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
சத்தம் கேட்டு கோகிலா வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், “உனது கணவர் பிரகாஷை வீட்டுக்குள் மறைத்து வைத்திருக்கிறாயா? அவரை வெளியே வரச் சொல். இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன்” எனக்கூறி மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பத்குமார் கோகிலாவின் கையைப் பிடித்து இழுத்ததாகவும், இதில் அவரது வளையல் உடைந்து கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் அறைந்ததுடன், தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “உனது கணவனையும், உன்னையும், உன் குழந்தைகளையும் சும்மா விடமாட்டேன்” எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பிரகாஷை தங்களிடம் வந்து பார்க்குமாறு கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பிறகு வீட்டுக்கு வந்த பிரகாஷிடம், நடந்த சம்பவம் குறித்து கோகிலா தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ், போலீசாரின் அவசர உதவி 100-எண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்த கோகிலாவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்விரோதம் காரணமாக தகராறு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரகாஷ் வீட்டுக்குச் செல்லும் குறுகலான, குண்டும் குழியுமான சாலையில் சம்பத்குமார் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி, பிரகாஷுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனை பிரகாஷ் தட்டிக்கேட்டபோது, சம்பத்குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக மறுநாள் அதே சாலையில் சம்பத்குமாரை பிரகாஷ் சந்தித்து, “நீங்கள் அரசு பேருந்து நடத்துனராக உள்ளீர்கள். உங்கள் பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய நீங்கள், மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது நியாயமா?” எனக் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சம்பத்குமார், “நான் அரசு வேலை பார்க்கிறேன். ஒரு சாதாரண விவசாயியான நீ எனக்கு புத்தி சொல்கிறாயா?” எனக் கூறியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக, பிரகாஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி கோகிலாவிடம் சம்பத்குமார் உள்ளிட்ட 5 பேரும் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தாக்குதலில் காயமடைந்த கோகிலா தாராபுரம் அரசு மருத்துவமனையின் பெண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கோகிலா கூறுகையில், “அமைதியாக வீட்டில் இருந்த எங்களை இருசக்கர வாகனங்களில் வந்து ஹாரன் அடித்து அச்சுறுத்தியதுடன், வெளியே வந்த என்னையும் எனது மாமியாரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். சம்பத்குமார் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் உள்ளிட்டவர்கள் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துவிட்டு இரவு நேரங்களில் வீட்டுக்குத் திரும்புகிறோம். இதுவரை தனியாகச் சென்று வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள மிரட்டல் காரணமாக அச்சமாக உள்ளது. எனவே, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே தமிழக முதலமைச்சரிடம் நான் வைக்கும் கோரிக்கை” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக குண்டடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.