புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து அறிக்கை :-
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் தாக்கல் செய்துள்ள 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் 14,300 கோடி ரூபாயில் 12,115 கோடி வருவாய் செலவாகவும் , 2,185 கோடி மூலதன செலவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த பட்ஜெட்டில் பெரும் பகுதி அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி ,மின்சாரம் வாங்குதல் உள்ளிட்ட வருவாய் செலவுகளுக்கே செல்லும் நிலையில் புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும் , புதிய உள்கட்டமைப்பு மற்றும் நிரந்தர சொத்துக்களை உருவாக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது மொந்தை பழசு
கள்ளு புதுசு என்ற கதையாக உள்ளது.
கடந்த இரட்டை என்ஜின் ஆட்சியிலே புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என்று மார்தட்டி கூறிய முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுச்சேரியை ஓஸ்ட் புதுச்சேரியாக மாற்றிவிட்டார். நிதியை பெருக்கும் உறுதி தன்மை இல்லாததால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்த பிறகு கூட மாநில அந்தஸ்து பெறுவதற்கு தான் இரட்டை என்ஜின் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றும் முதல்வர் தற்போதைய பட்ஜெட்டில் கூட புதுச்சேரியின் எதிர்கால வளர்ச்சிக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்று மக்களுக்கு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதனை செயல் படுத்த காலக்கெடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
புதுச்சேரி மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல 14,300 கோடி பட்ஜெட் என்று மார்தட்டி கொண்டு, மக்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள எந்த நிதி ஆதாரத்தையும் பட்ஜெட்டில் குறிப்பிடாமல் மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்துள்ளார்.
இது உப்பு சப்பு இல்லாத மக்கள் விரோத பட்ஜெட் ஆகும். இதில் மக்கள் வளர்ச்சிக்கான நிதி ஆதாரத்தை பெருக்க என்ன செய்ய போகிறார் என்று புதுவை மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்