கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள திருமதி தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் வே. சங்கீதா வரவேற்புரையாற்ற, கல்லூரிச் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் C.A. வாசகி தலைமையுரையாற்றினார். மேலும், கல்லூரி மேலாண்மைக் குழுவின் பொருளாளர் மருத்துவர் திரு O.N. பரமசிவன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைமைத் தொண்டரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான திரு K. அண்ணாமலை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
அப்போது உரையாற்றிய அவர், “இன்றைய தலைமுறை இளைஞர்கள் வேகமாக மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்று பொறுப்பேற்கும் மாணவர்கள் தலைவர்கள் அல்ல, அவர்கள் கல்லூரியின் மொத்த மாணவர்களின் பிரதிநிதிகள். கல்லூரி காலத்தில் மாணவர் தலைவர்களாக இருந்த பலர் பின்னாள்களில் தலைசிறந்த சமுதாயத் தலைவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், இளைஞர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், வேலையின்மை, புறக்கணிப்பு உள்ளிட்டவை அவர்களைப் போதைப்பொருள் கலாச்சாரத்தை நோக்கி நகரச் செய்கிறது என்றும், போதைப்பொருள் ஒழிப்புக்கு முன்பு மாணவர்களை அப்ப பழக்கத்திற்குத் தூண்டும் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைப்போக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர் தலைவர், செயலர், துணைத்தலைவர், இணைச்செயலர் மற்றும் விளையாட்டுத்துறைச் செயலர்கள் ஆகியோருக்கு அவர்களின் பெயரும் பதவியும் பொறித்த வில்லைகளைச் சிறப்பு விருந்தினர் வழங்கிக் கெளரவித்தார். தொடர்ந்து, போதைப்பொருள் தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடாமை, சூழல் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தி மாணாக்கர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். விழாவின் நிறைவாக மாணவர் பேரவையின் தலைவரும் முதுஅறிவியல் கணிதம் இரண்டாமாண்டு மாணவியுமான செல்வி B. சந்தியா நன்றியுரையாற்றினார்.