மன்னார்குடி., செப்.13-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலைகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகத்தை மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்டு தமிழக அரசு அமைக்க வேண்டும் என வேட்டைத்திடல் கிராம மக்கள் மற்றும் சிவாஜி கணேசன் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், மண்ணின் மைந்தர்கள் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நினைவு இல்லம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்கள், வேட்டைத்திடல் கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், சிவாஜி கணேசன் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலைப்பணிகள் மற்றும் அவரது பூர்வீக கிராமத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த பூர்வீக ஊரான மன்னார்குடி அருகேயுள்ள வேட்டைத்திடல் கிராமத்தில் அரசு சார்பில் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவரது கலை வாழ்க்கை, திரைப்படப் பங்களிப்பு, நாடகத் துறையில் ஆற்றிய பணிகள் மற்றும் தமிழ் கலாசாரத்துக்கு அவர் செய்த பங்களிப்புகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நினைவு இல்லம் அமைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலைகளை வளர்க்கும் வகையில் முத்தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1-ஆம் தேதியை ‘நடிகர்கள் தினம்’ என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரது பூர்வீக கிராமத்தின் வரலாற்றை பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பான கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, வேட்டைத்திடலில் நினைவு இல்லம், மன்னார்குடியில் சிவாஜி கணேசன் பெயரில் முத்தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அக்டோபர் 1-ஆம் தேதியை நடிகர்கள் தினமாக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.