கோவை கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில் நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான “ஜெனிசிஸ்’26” தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் பி. சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.
மாணவர்கள் தங்களது கல்லூரிப் பருவத்தை அறிவு, திறமை மற்றும் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்தி, எதிர்கால இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
கேஜிஎஸ்எல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் அசோக் பக்தவத்சலம், கேஜிஎஸ்எல் கல்வி நிறுவனங்களின் எதிர்கால முன்னெடுப்புகளுக்கான இணை இயக்குநர் அத்விக் கோவிந்த் அசோக் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
விழாவில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் பணிப்பயண அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
முதலாமாண்டு மாணவர்களின் கல்லூரிக் கல்விப் பயணத்தை நம்பிக்கையுடனும் புதிய இலக்குகளுடனும் தொடங்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.