திருச்சி மாநகர காவல்துறை – காந்தி மார்க்கெட் காவல்நிலையம், ஆத்மா மனநல மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன்,JCI திருச்சி, அக்னி சிறகுகள் அமைப்பு சார்பில்
உலக மனநல தின உறுதிமொழி நிகழ்ச்சி திருச்சி காந்தி சந்தை மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
உலகெங்கும் உள்ள மக்களின் மனநல ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் உலக மனநல தினம் அக்டோபர் 10 கடைபிடிக்கப்படுகிறது.2026 ஆம் ஆண்டிற்கான உலக மனநல தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருளாக “கேட்ட வாழ்க்கை அனுபவங்கள்: உண்மையான குரல்கள், உண்மையான மாற்றம்” என்பது உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்களின் சொந்த அனுபவங்களையும், அவர்களின் உண்மையான குரல்களையும் சமூகம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்பதே இந்த ஆண்டின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் மட்டுமே மனநலப் பராமரிப்பில் உண்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை தலைமை மனநல மருத்துவர் கே. ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலில் உலக மனநல தின நிகழ்ச்சி நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக காந்தி மார்க்கெட் சரக உதவி ஆணையர் சபாபதி பங்கேற்றார், காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் விஜய், பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, ரவி, பிரேம்குமார், இருதயராஜ் தலைமை காவலர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை தலைமை மனநல மருத்துவர் கே. ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலில் ஆத்மா மனநல மருத்துவமனை சமூக மன நல ஆலோசகர் கரன் லூயிஸ்
ஆத்மா மனநல மருத்துவமனை மனநல ஆலோசகர் அஸ்வினி,மக்கள் தொடர்பு துறை சகாயராஜ் பீர்முகமது புவனேஸ்வரன்,லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன தலைவர் பேராசிரியர் ஹேமலதா, சாசன செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் உலக மனநல தின உறுதிமொழி ஏற்றனர்.
உறுதிமொழியில், நான், மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மனநலமும் உடல்நலமும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதியேற்கிறேன். மனநலப் பாதிப்புள்ளவர்களைப் பாகுபாடின்றி மதித்து, அன்புடனும் கருணையுடனும் நடத்துவேன். மனநலப் பிரச்சினைகள் குறித்த தவறான நம்பிக்கைகளையும் களங்கத்தையும் அகற்ற என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வேன்.
மன அழுத்தம் மற்றும் மனநலப் பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். மனநலப் பிரச்சினைகளுக்கு முறையான மருத்துவ உதவியும் ஆலோசனையும் பெறுவதன் அவசியத்தை எடுத்துரைப்பேன் எனது மனநலத்தையும் பாதுகாத்து, பிறரின் மனநலத்திற்கும் மதிப்பளிப்பேன். ”மனநலம் காப்போம்! மனிதநேயம் வளர்ப்போம் மனநலமுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்!” இதனை எனது உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு, மனநலம் காக்க வாழ்நாள் முழுவதும் பாடுபடுவேன் என்று உறுதி மொழி ஏற்றனர்.