தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லானூரில் அமைந்துள்ள மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில், “தமிழிலே கையொப்பமிடுவோம்! தமிழைத் தலைநிமிரச் செய்வோம்! என் மொழி என் அடையாளம்!” என்ற முழக்கத்துடன் தமிழில் கையொப்பமிடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்மொழியின் பெருமையை உணர்த்தவும், அன்றாட வாழ்வில் தமிழில் கையொப்பமிடும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமிழில் கையொப்பமிட்டனர். மேலும், இனிவரும் காலங்களில் தமிழிலேயே கையொப்பமிடுவோம் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்குக் கல்விக் குழுமத்தின் தாளாளர் முனைவர் கா. கோவிந்த் தலைமை வகித்தார். கல்விக் குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த், கல்லூரி முதல்வர் முனைவர் சி.பரஞ்சோதி, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் இல.சதீஷ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் கி.திருச்செல்வன் ஒருங்கிணைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாகக் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் பணிநிறைவு பெற்ற தமிழ்த்துறை இணைப் பேராசிரியரும் முன்னாள் துறைத் தலைவருமான நா.பழனிவேலு, சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அச்சுதன் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழில் கையொப்பமிட்டு, தமிழ்மொழியின் சிறப்பையும் தாய்மொழியில் கையொப்பமிடுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துச் சிறப்புரையாற்றினர்.
சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பழனி, மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் நா.நாகராஜ், நஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர்ப் பட்ட ஆய்வாளர் ச.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
“என் மொழி என் அடையாளம்; என் கையொப்பம் தமிழின் அடையாளம்” என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தமிழ்மொழியின் மீதான பற்றையும் தாய்மொழிப் பயன்பாட்டின் அவசியத்தையும் வலியுறுத்தும் சிறந்த முன்னெடுப்பாக இந்நிகழ்வு அமைந்தது.