தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தென்காளஹஸ்தி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் பல ஆண்டுகளாகத் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. மேலும், கோவில் தெப்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் தனியார் சிலரின் அனுபவத்தில் இருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

கோவில் சொத்துகளை மீட்கவும், தெப்பத் திருவிழா நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவிலுக்குச் சென்ற கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தெப்பத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியது

கோவில் தெப்பம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனை உடனடியாகச் சீரமைத்து, தெப்பத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிலுக்குச் சொந்தமான வயல்கள் மற்றும் நிலங்கள் முறையாகக் குத்தகைக்கு விடப்படாமல், பல ஆண்டுகளாகச் சிலரின் அனுபவத்தில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, கோவில் நிலங்களை ஆய்வு செய்து மீட்டு, முறையாகக் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்குச் சொந்தமான கடைகளையும் முறைப்படுத்தி, உரிய நடைமுறைகளின்படி செயல்படுத்த வேண்டும்.

மேலும், கோவில் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் விசாரித்து, முறைகேடுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் மீண்டும் தெப்பத் திருவிழா நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ., கோவிலுக்குச் சொந்தமான திருமண மண்டபம் கட்டுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட்டார். மேலும், திருமண மண்டபம் கட்டுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *