மதுராந்தகம், அக். 12:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பரந்தாமன், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மதுராந்தகம் பஜார் வீதியில் மாவட்டக் கழகச் செயலாளர் க. சுந்தர், நகரச் செயலாளர் குமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்று, பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். தனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பரந்தாமன் கூறியதாவது:
திமுக பல்வேறு வெற்றி, தோல்விகளைக் கடந்து எப்போதும் மக்களுக்காகக் களப்பணியாற்றி வருகிறது. மக்கள் பணியில்தான் திமுக இன்றும் என்றும் பயணித்து வருகிறது. எத்தனையோ சூறாவளிகளைச் சந்தித்த இயக்கம் திமுக. பொதுத்தேர்தலாக இருந்தாலும், இடைத்தேர்தலாக இருந்தாலும் எந்தத் தேர்தலிலும் திமுக முடங்கிவிடாது.
தமிழக வெற்றிக் கழகம் என்பது அஸ்திவாரமில்லாத கட்சி. மக்கள் பணியில் ஈடுபடாமல், பொதுச்சேவை என்றால் என்னவென்றே தெரியாமல், அதிர்ஷ்டத்தாலும் எதிர்பாராத சூழலாலும் 100 இடங்களைப் பெற்றுவிட்டனர். ஆனால், பொதுத்தேர்தலில் ஏற்படும் சரிவைக் கண்டு திமுக ஓடிவிடாது. இதற்கு அடிப்படைக் காரணம் மக்களுக்காகத் தொடர்ந்து ஆற்றிவரும் பணிதான்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நீலச்சாயம் வெளுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. மக்களிடமிருந்து திமுகவை ஒருபோதும் பிரிக்க முடியாது.
நடந்து முடிந்த தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விட்டுச் சென்றார். ஆளுங்கட்சியின் பலம், பணபலம், அதிகார பலம் என அனைத்தும் இருந்தும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் பெரும் சிரமப்பட்டனர். இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்குத் திமுக தண்ணி காட்டியுள்ளது.
ஐந்து நிமிடங்கள் பிரசாரம் செய்தாலே ஆகாயத்தை வில்லாக வளைப்போம் என்றும், கொத்துப் பரோட்டா போடுவோம் என்றும் கூறினார்கள். ஆனால், முதல்வர் மூன்று நாள்கள் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
மக்கள் சக்திக்கு முன்னால் யாரும் பெரியவர்கள் கிடையாது. மக்கள்தான் எஜமானர்கள். பிரசாரத்தின்போது முதல்வர் தேநீர் அருந்தினார்; விவசாய டிராக்டரையும் ஓட்டினார். ஆனால், முதல்வருக்கு தேநீரின் விலை என்ன என்பது தெரியாது என்றும், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்னைகள் குறித்தும் அவருக்குத் தெரியாது என்றும் விமர்சித்தார்.
75 ஆண்டுகளைக் கடந்த திமுக, என்றும் மக்களோடும் மக்கள் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இயக்கமாகத் திகழ்கிறது.
இவ்வாறு திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்தார்.