செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்தளூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியைத் தடுப்பதாகக் கூறி, அதிமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்தளூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் பாதையில், 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் 2023–24 நிதியாண்டில் 110 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் சாலை அமைக்கும் பணி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இந்தளூர் அதிமுக கவுன்சிலர் கிரிஜா சிவா, சாலை அமைக்கும் பணியைத் தொடர்ந்து தடுத்து வருவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், சாலை அமைக்கும் பணியைத் தடுப்பதாகக் கூறப்படும் கவுன்சிலர் கிரிஜா சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *