கரூர்செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் முழுவதும் வணிகர்கள் கோரிக்கை அட்டை அணிந்து அமைதிப் போராட்டம்..
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவின் உத்தரவின்பேரில், கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழிற் கழகம் சார்பில் அமைதிப் போராட்டம் நடைபெற்றது.UPI மூலம் ரூ.2000-க்கு மேல் பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் வணிகர்கள் கோரிக்கை அட்டை அணிந்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் கடை வீதியில் நடைபெற்ற முதன்மை போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் Lion K.S. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் M.பால்ராஜ்,மாவட்டப் பொருளாளர் K. கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் கந்தசாமி, இணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வம்,சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன் கரூர் காமராஜர் மார்க்கெட் சங்கத் தலைவர் அசோக்குமார், அமராவதி, வியாபாரிகள் சங்க செயலாளர் சிவசங்கர்,ஆட்டோமொபைல் அசோசியேஷன் தலைவர்பாரதி, உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர்லோகநாதன்,அரிசி ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் மாதவன், லாரி உரிமையாளர் சங்க செயலாளர் நந்தகோபால், கன்ஸ்யூமர் அசோசியேஷன் தலைவர் புஷ்பராஜ் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தலைவர் Lion K.S. வெங்கட்ராமன் கூறுகையில் மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்துவிட்டு, தற்போது UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் என வணிகர்களுக்கு மட்டும் வரி விதிப்பது நியாயமற்றது. இதனால் வணிகர்கள் மட்டுமின்றி இறுதியில் வாடிக்கையாளர்களும் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.எனவே இந்த கட்டண அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இன்று மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள அமைதிப் போராட்டம் நடத்தியுள்ளோம். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மாநிலத் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.