பேராவூரணி, அக்.12 –
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திநாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள், இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயக முறைப்படி போராடி வந்த இடதுசாரிகள், இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையைக் கொண்டு தடியடி நடத்தி போராட்டத்தை ஒடுக்க முயன்றதையும், போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததையும் கண்டித்தும், இடதுசாரி கட்சி அலுவலகங்களை துணை ராணுவப்படையைக் கொண்டு சுற்றிவளைத்து அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுக்களின் சார்பில், பேராவூரணி பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எம்.செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், சி.ஆர்.சிதம்பரம், உலகநாதன், ரவி, ராமலிங்கம், நீலமோகன், ஜாக்குலின் மேரி, பெரியண்ணன், மாணிக்கம் உள்ளிட்ட இரு ஒன்றியங்களின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பேராவூரணி நீலகண்டன் .