தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடுகளுக்கு பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.
முகாமில், வீடு இல்லாத பொதுமக்கள் வீடுகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளித்தனர். விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைச் சமர்ப்பித்தனர். முதல் நாளில் 50-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இந்த சிறப்பு முகாம் நாளை செவ்வாய்க்கிழமை அன்றும் நடைபெறுகிறது. கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வீடு இல்லாத தகுதியுள்ள பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்துப் பயன்பெறலாம்
இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ கூறியது
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காகச் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே, வீடு இல்லாத தகுதியுள்ள பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்துப் பயன்பெற வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வசதி பெற்றுத் தரவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது
முகாமில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியப் பொறியாளர்கள் ஆனந்தகுமார், கதிரேசன், வளர்மதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தென்மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அய்யர், கம்பம் நகரப் பொறுப்பாளர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.