நேபாள உலகக் கோப்பை பவர்லிஃப்டிங் போட்டி!-தமிழக வீரர், வீராங்கனைகள் 6 பேர் பங்கேற்று 21 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை!

சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் மாலை அணிவித்து, கேக் வெட்டி உற்சாக வரவேற்பு

சென்னை: நேபாளத்தில் நடைபெற்ற 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 21 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த மாதம் 25, 26-ந்தேதிகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்பட 9 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் தமிழகத்திலிருந்து 4 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 6 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து 21 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த லதீஃபா, குமுதவள்ளி, கார்த்திக் மற்றும் கோவையைச் சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன், ஸ்ரீமன், வினோத் ஆகியோர் இந்தியா சார்பில் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் சென்னையைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் மற்றும் ஒரு வீரர் டெல்லி வழியாக சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களுக்கு உறவினர்கள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அரசு உதவி கிடைத்தால் உலக அளவில் மேலும் சாதிப்போம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைகள் கூறியதாவது:

“தமிழக முதல்-அமைச்சர் கூறிய ‘ட்ரக்கை விடு, ஸ்போர்ட்ஸ் எடு’ என்ற கருத்தை மனதில் கொண்டு விளையாட்டில் ஈடுபட்டு வருகிறோம். திருமணமான பெண்களாக இருந்தாலும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளோம்.

எங்களுக்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை போதிய உதவிகள் கிடைப்பதில்லை. அரசு உதவிகள் கிடைத்தால் இன்னும் சிறப்பாகப் பயிற்சி பெற்று உலக அளவிலான போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

உலகக் கோப்பை பவர்லிஃப்டிங் போட்டியில் 21 தங்கப் பதக்கங்களை வென்று நாடு திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *