பேராவூரணி,
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை, வட்டாட்சியர் சி.பாலசுப்பிரமணியன் முன்னிலையில், முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் டி.கலியமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி, நீலகண்ட பிள்ளையார் கோவில் வரை சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து, நீலகண்ட பிள்ளையார் கோவில் வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு அலுவலர் வி.சீனிவாசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் நீலகண்டன், ரஜினி, விக்னேஷ், ஆகாஷ், கண்ணன், ராமானுஜம், வினோத், கபிலன், வேல்முருகன், மாயக்கண்ணன் ஆகியோர் தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முறைகள் மற்றும் முதலுதவி செய்வது குறித்து செய்து காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டாட்சியர் எஸ்.சுரேஷ், மண்டல துணை வட்டாட்சியர் வி.கண்ணகி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் நா.பழனிவேல், ப.ஜெயக்குமார், ஜி.முத்துகிருஷ்ணன், ம.மணிகண்டன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பேராவூரணி நீலகண்டன் .