தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை நடைமுறைகள் நிலவுவதாக எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், வரும் 30-ஆம் தேதி பல்வேறு ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்துத் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இதுதொடர்பாக, தாராபுரம் ஐந்து சாலையில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் கீதாவிடம் தலித் விடுதலை இயக்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கருப்பையா கூறியதாவது:

வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மத்தியில் சாதியப் பாகுபாடு நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளச் செய்வதுடன், குறிப்பாகப் பட்டியலின மாணவர்களைக் குறிவைத்து இத்தகைய பணிகளைச் செய்ய வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தப் பிரச்சினை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலவி வருகிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும், பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.தற்போது தலித் விடுதலை இயக்கம் சார்பில் இப்பிரச்சினை தொடர்பாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீது பள்ளிக் கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்பப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் சாந்தியை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.மேலும், வெள்ளக்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, மாணவர்களிடையே சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை நடைமுறைகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய வேண்டும்.

இந்தப் புகார் தொடர்பாக வட்டார மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், வரும் 30-ஆம் தேதி தலித் விடுதலை இயக்கத்தின் தலைமையில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்துத் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும்.மாணவர்களின் கல்வி உரிமை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *