ஓட்டுநருக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தி சக ஓட்டுநர்கள் போராட்டம் – 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புதுவண்ணாரப்பேட்டை, அக். 21:
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே மாநகரப் பேருந்து ஓட்டுநரை கல்லால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த ஓட்டுநருக்கு ஆதரவாக சக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால், வள்ளலார் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (50), சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். 56P வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தை ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வள்ளலார் சாலை வழியாக பூவண்ணாரப்பேட்டை அருகே பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்றபோது, எதிர்திசையில் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அப்போது, ஆட்டோவை ஓரமாக நிறுத்துமாறு ராஜேந்திரன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், ராஜேந்திரனின் தலையில் கல்லால் தாக்கிவிட்டு, ஆட்டோவை சம்பவ இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ரத்தம் சொட்டிய நிலையில் பேருந்துக்குள் சரிந்து விழுந்தார். இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அவரை மீட்டு முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே, சக ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, அந்த வழியாக வந்த 50-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகளை ஓட்டுநர்கள் ஆங்காங்கே நிறுத்தினர். தொடர்ந்து, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என ஓட்டுநர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
இதனால் வள்ளலார் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் போராட்டம் நீடித்தது.
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், சென்னை ராயபுரம் மாடல் லைன் ஐந்தாவது தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரத்குமார் என்ற பப்லு (32) கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசல் சீரானது.